வன்முறை களமாக மாறிய மே.வங்கம் தேர்தல் களம்...18 உயிர்கள் பறிபோனதற்கு என்ன காரணம்?

x

மேற்கு வங்க தேர்தல் களம் வன்முறை களமாக மாறியதற்கு அரசியல் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கே வன்முறை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் என எல்லை பாதுகாப்பு படையினர் குற்றஞ்சாட்டியுள்ளர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


சுமார் 18க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ளது மேற்கு வங்க ஊரக உள்ளாட்சி தேர்தல். வெட்டுக்குத்து, அடிதடி, குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு என ரணகளமாக மாறியது வாக்குப்பதிவு மையங்கள்.

இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களில், 11க்கும் மேற்பட்டோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் பாஜகவினரோ மாற்றி மாற்றி குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். ஒரு பக்கம் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பேசியுள்ள எல்லை பாதுகாப்பு படையின் டிஐஜி, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளா. தேர்தல் நடைபெறுவதாக அறிவித்த போது மட்டுமே தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பின் முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த தகவல்களை கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை கடிதம் எழுதியதாகவும், ஆனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகளை மட்டுமே குறிப்பிட்டு விட்டு, வாக்குச்சாவடியின் விவரங்களை கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, சுமார் 59 ஆயிரம் காவலர்களும், மத்திய ஆயுதப்படை காவலர்களும் வந்திருந்த நிலையில், முக்கிய வாக்குச்சாவடிகளில் அவர்களை பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 61 ஆயிரத்து 636 வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரத்து 834 வாக்குச்சாவடிகள் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டிய இடம் என அரசு தெரிவித்திருந்தது, அதனால் அப்பகுதிகளில் மட்டுமே மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் 4 ஆயிரத்து 834 வாக்குச்சாவடிகளையும் தாண்டி பல வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த சாவடிகளாகவெ இருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தியிருந்தாலும் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவித்தார்.

இப்படி ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை அடுக்கி வருவதால், உரிய விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்