வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம்..2 ஆண்டுகளாக அடம்பிடித்த குடும்பம்.. விசாரித்த அதிகாரிகளுக்கு ஷாக் - குமரியில் பரபரப்பு
நாகர்கோவிலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்த குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 3 பெண்கள் உட்பட 4 பேர் அடங்கிய குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஜன்னல், கதவுகளை பூட்டிக் கொண்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் தொடர்பு கொள்ள முயன்றும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் வீட்டின் வெளி கேட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரோனா அச்சம் காரணமாக வீட்டிற்குள் இருப்பதாகவும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தனர். மேலும் வீட்டின் உள் கேட்டை திறக்க அவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், இதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்துவரும் அதிகாரிகள், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.