விடாப்பிடியாக நிற்கும் உக்ரைன்... அணு ஆயுதத்தை கையிலெடுக்க வாய்ப்பு - 2ம் ஆண்டில் போர்.. அரண்டு நிற்கும் உலகம்!

x
  • உக்ரைனை உருக்குலைத்து விட்டது இந்த ஓராண்டு போர்... போருக்கு விலையாய் கொடுக்கப்பட்டது ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள்... போருக்குக் கிளம்பிய மகன்களின் சடலங்கள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர் உக்ரைன்-ரஷ்ய தாய்மார்கள்...
  • தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பிறந்த மண்ணை விட்டு விட்டு அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் லட்சக்கணக்கான உக்ரைனியர்கள்...
  • தாலாட்டுக் கேட்டு வளரவேண்டிய குழந்தைகளுக்கு நித்தம் நித்தம் கேட்கும் வெடிகுண்டு சத்தங்களே தற்காலிக தாலாட்டானது... ஏடெடுத்து பாடம் படிக்க வேண்டிய பிள்ளைகள் இறந்து கிடக்கும் சடலங்களைக் கணக்கெடுத்து கணிதம் கற்கின்றனர்... இருளையும் பகலையும் ஆட்கொண்ட இந்த போர் மேகம் எப்போது களையும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது...
  • 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த போரில் இருதரப்புகளுமே அடுத்த கட்ட நகர்வுக்குத் தீவிரமாய் தயாராகி வருகின்றன... அதிநவீன ஆயுதங்களும், ஆளுமை படைத்த வீரர்களும் களத்தில் புதிதாய் களமிறக்கப்படலாம்... கடந்த ஆண்டு உக்ரைனில் ரத்த ஆறு ஓடினால், இந்த ஆண்டு அது ரத்த வெள்ளப்பெருக்காக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
  • 2014ல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியா உட்பட அனைத்து உக்ரைனிய பிராந்தியங்களையும் விடுவிப்பதே எங்கள் நோக்கம் என சூளுரைத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி...
  • சில பகுதிகளை உக்ரைன் படைகள் போராடி விடுவித்தாலும் கூட, கடந்த 12 மாதங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் பகுதிகள் இன்னும் ரஷ்ய கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதே நிதர்சனம்...
  • உக்ரைனியர்களுக்கு மேற்கு நாடுகள் போர் பயிற்சியுடன், ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றனர்...
  • வெற்றியும் தோல்வியும் சகஜமென ரஷ்யாவும் போரைத் தொடர்ந்து வருகிறது... உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள மேற்கு நாடுகளுக்குக் கூட போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது தெளிவாக புலப்படவில்லை...
  • 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் அமெரிக்கா மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது... போரில் நேரடியாக நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று கூறி வந்த மேற்கு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கியதன் மூலம் மறைமுகமாக போரில் பங்கேற்றன... அதிலும், கடந்த மாதம், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு அதிநவீன ஜெர்மன் மற்றும் அமெரிக்க பீரங்கிகளை வழங்க அனுமதித்ததன் மூலம் அபாய கோட்டை எல்லை மீறின...
  • ஐரோப்பிய ஒன்றியக் கொள்கை வகுப்பாளர்களின் சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஒரு சிலரே உக்ரைனின் முழு விடுதலையும் சாத்தியம் என்று கருதுகின்றனர்... ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளதாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர்...
  • இப்போரில் 2 முடிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது... ஒருபக்கம் உக்ரைன் வெற்றிபெறலாம்... , குறிப்பாக கிரிமியா மட்டும் உக்ரைன் வசம் சென்றால், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதத்தைக் கையில் எடுக்க வாய்ப்புள்ளது... இது போரை விட மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக் கூடும்...
  • மறுபுறம் ரஷ்ய வெற்றி என்பது உக்ரைனுக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் மேற்குலக நாடுகளுக்கும் மிகப்பெரிய தோல்வியாக அமையும்... ஆனால் நினைத்ததை விட சற்று சுமாரான போர்க்கள செயல்திறனைக் கொண்டுள்ள ரஷ்ய படைகளுக்கு வெற்றி சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது...
  • ரஷ்யாவால் ஒரு சில பகுதிகளை தன் வசம் கொண்டு வர முடிந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார இழப்புகளே அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதை முடிவு செய்யும்...
  • உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும், உக்ரைன் ராணுவத்திற்கும் இடையில் மோதலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீறி,அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒத்துக்கொள்ளாமல், புதினின் எச்சரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்து போரைத் தொடர்ந்து வருகிறார் ஜெலென்ஸ்கி... எதற்காக இத்தனை இழப்புகள்... எதற்காக இத்தனை தியாகங்கள்?... ஒரே பதில், விடாமல் போராட வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் விடாப்பிடி தான்...
  • இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சுறுத்தலுடன் துவங்கியுள்ள இந்த 2ம் ஆண்டு போர் இருநாடுகளின் தலைவர்களும் அமர்ந்து பேசினால் ஒழிய அமைதியாக முடிவடையாது என்பதே நிதர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்