தக்காளி...தக்காளி...தக்காளி...வடக்கு முதல் தெற்கு வரை இதான் பேச்சு...ஒட்டு மொத்தத்திற்கும் ஒரே காரணம்
மீண்டும் தக்காளியின் விலை சதம் அடித்திருப்பதற்கு என்ன காரணம்? தக்காளியின் விலை எப்பொழுது குறைய வாய்ப்பு என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.
கடந்த வாரம் திடீரென சதம் அடித்த தக்காளியின் விலை அதன் பிறகு படிப்படியாக சிறிது குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சதத்தை கடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிகரித்த வெப்பம்.... திடீர் கனமழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை, 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, அதற்கு அடுத்த நாள் 70 ரூபாய்க்கும், வியாழக்கிழமை அன்று 60 ரூபாய்க்கும் விலை குறைந்து விற்பனையாகியது. அதன் பிறகு திடீரென மீண்டும் விலை உயர தொடங்கிய தக்காளி, நேற்று முந்தைய தினம் 75 ரூபாய்க்கும், நேற்று 90 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று மேலும் 10 ரூபாய் கூடி , ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சில்லறை சந்தையில் ஒரு கிலோ தக்காளி தற்போது 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுவது, அதிச்சே ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த.... தக்காளியை பதுக்கி வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்த நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மட்டும் இன்றி, நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தக்காளியை கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசை பொருத்தவரை வரத்து அதிகரித்தவுடன் இன்னும் 15 நாட்களில் தக்காளியின் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, மொத்த தக்காளி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களின் பங்களிப்பு மட்டும் 51.5 சதவீதமாக இருக்கிறது.
ஆனால் குஜராத்தில் தக்காளி உற்பத்தி 23.9 சதவீதமும், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் தக்காளி உற்பத்தி 20 சதவீதமும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தக்காளியை பொருத்தவரை ராபி மற்றும் காரிஃப் ஆகிய இரண்டு அறுவடை காலங்களிலும் பயிரிடப்படுகிறது.
ராபி அறுவடை பருவம் என்பது டிசம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிப்பதால் இந்த காலகட்டத்தில் அதிக வெப்ப சலனம் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் தக்காளியின் விலையில், ஆண்டுதோறும் மே , ஜூன் மாதத்தில் திடீர் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. சென்ற ஆண்டும் இதே போல் மே மாதத்தின் இறுதியில் திடீரென தக்காளியின் விலை 120 ரூபாய் வரை உயர்ந்திருந்தது.
ஆனால் அடுத்து வர உள்ள ஜூலை தொடங்கி நவம்பர் மாதம் வரையிலான காரிஃப் அறுவடை பருவத்தில் தக்காளியின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.