ஒரே வாரத்தில் 3 சம்பவங்கள்... துப்பாக்கியை கையிலெடுக்கும் போலீசார் - என்ன நடக்கிறது தமிழகத்தில்..?
- ரவுடிகளை விரட்டிச் சென்று பிடிப்பது, அவர்களுடன் பொதுவெளியில் சண்டையிடுவது, முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பது என சினிமாவில் ரீல் போலீஸ்களை பார்த்து பழகிய நமக்கு நிஜத்தில் கடந்த ஒரே வாரத்தில் தமிழகத்தில் மூன்று இடங்களில் அரங்கேறியுள்ளது....
- குற்றவாளிகளை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லும் போதும், தலைமறைவாக இருந்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி சென்ற போதும் போலீசாரிடம் குற்றவாளிகள் அவர்களின் விளையாட்டை நடத்துவது நாம் அறிந்ததே..
- இதில், ரவுடிகளை தப்பிக்க விடாமல் இருக்கவும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கடந்த ஒரு வாரத்தில் கோவை, திருச்சி மற்றும் சென்னை என அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது.
- தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
- இந்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பிய மனோஜ் அளித்த தகவலின் அடிப்படையில் நீலகிரியில் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- இதில், விசாரணைக்காக இவர்களை கோவைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது கவுதம் மற்றும் ஜோஸ்வா என்ற இரு இளைஞர்கள் வாந்தி, மயக்கம் வருவதாக கூறி வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
- அப்போது போலீசார் அசந்த நேரத்தில், அவர்கள் இருவரும் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை துரத்தி சென்ற போலீசாரை, இருவரும் புதர்களில் கிடந்த கம்பியால் தாக்கியதில் போலீசார் காயமடைந்தனர்.
- இதையடுத்து, இருவரையும் எச்சரித்த காவல் உதவி ஆய்வாளர் வேறு வழியின்றி முழங்காலில் சுட்டு பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- இதே போல், கஞ்சா கடத்தல், ஆள்கடத்தல் கொலை வழக்குகளில் தொடர்புடைய திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சகோதரர்களான துரைச்சாமி மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- அப்போது, சினிமாவில் வரும் காட்சியை போல், கண்ணிமைக்கும் நேரத்தில், போலீஸ் வாகன ஸ்டியரிங்கை வேகமாக வேறு திசை நோக்கி திருப்பி வாகனத்தை கவிழ்க்க செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதில், காவலர்கள் காயமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இருவரும் தப்பிக்க முயன்ற நிலையில், துரத்தி வந்த காவலர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- இதனால், ஆபத்தை உணர்ந்து கொண்ட காவலர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் முழங்காலுக்கு கீழே சுட்டு பிடித்து தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
- இந்த வரிசையில், சென்னை அயனாவரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை மர்ம கும்பல் இரவில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதில், சாலையில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து காவலரை தாக்கிய குற்றவாளிகளை போலீசார் கண்பிடித்தனர்.
- இதையடுத்து, அயனாவரம் பெண் காவல் ஆய்வாளர் மீனா தலைமையில் கிளம்பிய தனிப்படை போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- இதன்பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்த போது, ரவுடி பெண்டு சூரியா என்பவர் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர் தப்பி ஓட முயன்றதால் போலீசார் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது.
- உடனே ரவுடியை துரத்தி சென்ற காவலர்களை அருகில் இருந்த கரும்பு ஜூஸ் கடையிலிருந்து கத்தியை எடுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதை கவனித்து கொண்டிருந்த காவல் ஆய்வாளர் மீனா, குற்றவாளியை பிடிப்பதற்காகவும், காவலர்களை பாதுகாக்கவும் பெண்டு சூரியாவை முழங்காலுக்கு கீழே சுட்டுப்பிடித்துள்ளார்...
- காயமடைந்த ரவுடிக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது...
Next Story