மனைவியை காப்பாற்ற போராடிய கணவர்.. கைவிரித்த டாக்டர்..வழியிலே பிரிந்த உயிர்.. நடந்தே தோளில் சுமந்து சென்ற பரிதாபம்
இறந்த மனைவியின் சடலத்தின் அருகே, செய்வதறியாது கையறு நிலையில் அமர்ந்திருக்கும் இவர் தான் ஒடிசாவைச் சேர்ந்த சாமுலு... சாதாரண கூலித் தொழிலாளியான இவரின் மனைவி இடுகுரு....
குளம் போல் அமைதியாக சலனமின்றி சென்று கொண்டிருந்த சாமுலுவின் வாழ்க்கை... திடீரென்று இடுகுருவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் கடலாய் கொந்தளித்தது...
ஒடிசாவில் வைத்தும் வைத்தியம் பார்க்க முடியவில்லை... வேறு வழியின்றி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடுகுருவை சிகிச்சைக்காக அனுமதித்தார் சாமுலு...
ஆனால், அங்கும் இடுகுருவின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கவே, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு சொல்லி விட்டனர் மருத்துவர்கள்...
உடல் நிலை சரியில்லாத மனைவியை பேருந்தில் அழைத்துச் செல்ல மனமில்லாத சாமுலு, ஆட்டோவை வாடகைக்கு எடுத்து அதில் இடுகுருவை அமர்த்தி ஒடிசாவுக்கு பயணத்தைத் துவங்கினார்...
ஆட்டோ விஜயநகரம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று இடுகுருவின் உயிர் தன் மடியிலேயே பிரியவே, பதைபதைத்துப் போனார் சாமுலு...
பயந்து போன ஆட்டோ ஓட்டுநர் பாதியில் கைவிட, மனைவியின் சடலத்துடன் இறக்கி விடப்பட்டார் சாமுலு...
மொழி தெரியாத ஊர்... உதவி கேட்க தெரிந்தவர்களும் இல்லை... ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல பணமும் இல்லை... வேறு வழியே இல்லை என தன் மனைவியின் உடலைத் தோளில் சுமந்து கொண்டு ஒடிசாவுக்கு நடையைக் கட்டினார் சாமுலு...
விறுவிறுவென சாலையில் சடலத்துடன் சென்று கொண்டிருந்த சாமுலுவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்...
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாமுலுவின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி, இடுகுருவின் உடலை இலவசமாக சொந்த ஊர் வரை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்... காவல்துறையினரின் மனிதாபிநேயமிக்க செயலை மக்கள் வெகுவாக பாராட்டினர்...
மனைவியின் உயிரை எப்படியாவது காப்பாற்றி விட மாட்டோமா என்று ஒடிசாவில் இருந்து ஆந்திரா வந்த தனது ஆசை நிராசையான நிலையில், கண்ணீரோடு ஆம்புலன்சில் புறப்பட்டார் சாமுலு...