விஷம் குடித்த முதியவரை காப்பாற்றிய காவலர்... குவியும் பாராட்டு
காரைக்காலில் விஷம் அருந்திய முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில், திலீப் குமார், சிவஞானம் ஆகிய இரு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முதியவர் ஒருவர், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்ட அவர்கள், அவரை இருசக்கர வாகனத்திலேயே காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால், அவர் உயிர் பிழைத்ததாக தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் மயங்கி கிடந்த முதியவரின் பெயர் குப்புசாமி என்பதும், வறுமை காரணமாக வளர்த்த ஆடுகளை விற்றதற்காக மனைவி சண்டையிட்டதால், பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதனிடையே முதியவரை காப்பாற்றிய காவலர்களுக்கு, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதேபோல் மாவட்ட எஸ்.பி காவலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.