திரும்பவும் வந்த 'அரிக்கொம்பன்'... வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் - அச்சத்தில் ஆழ்ந்த மலைப்பகுதி மக்கள்
கேரளாவில் அரிக்கொம்பன் காட்டுயானை ஹைவேவிஸ் மலைப்பகுதிக்குள் நுழைந்ததையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தது.
நேற்று அதிகாலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இரவங்கலாறு என்ற இடத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டு இருந்தன. அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு வெளியே பார்த்த போது, அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டின் முன்பு ஒரு யானை நின்றது. அந்த யானை திடீரென கருப்பசாமி வீட்டின் கதவை உடைத்தது. பின் வாசல் வழியாக வீட்டுக்குள் தும்பிக்கையை விட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டையை வெளியே இழுத்து தின்றதாக கூறப்படுகிறது. யானையை பார்த்த நபர், அதன் கழுத்தில் ஏதோ கட்டப்பட்டு இருந்ததாக கூறினார். இதனால், அந்த யானை கேரளாவில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையாக இருக்குமோ என்ற பயம் மக்களிடம் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் வனச்சரகர் சிவாஜி தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அரிக்கொம்பன் யானை வந்து சென்றது உறுதியான நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.