டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. மண்டையில் மாறி மாறி விழுந்த கல், கட்டை - கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட வழக்கறிஞர்
டெல்லியில், வழக்கறிஞர்களுக்கு இடையேயான வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகராறு செய்து கோர்ட்டுக்கு போகலாம்... ஆனா அந்த கோர்ட்டுலியே தகராறு நடந்தா எங்கம்மா போறது என புலம்ப வைத்துள்ளது டெல்லிநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்குள் நடந்த வன்முறை சம்பவம்...
டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், பிரச்சினை காரணமாக, வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அங்கு திரண்ட மற்ற வழக்கறிஞர்கள், ஆதரவாக பேசுவதாகக் கூறி, ஒருவரை ஒருவர் சரமாரியாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் கற்களாலும், கம்புகளாலும் தாக்கிக் கொண்டது, நீதிமன்றமே போர்க்களமாக மாறியது.
அந்த நேரத்தில், வழக்கறிஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அந்த சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்துவர்கள் சிதறி ஓடினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிரடியாக செயல்பட்டு, வழக்கறிஞர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டினர். இதனால் சற்று பதற்றம் குறைந்ததை அடுத்து, வன்முறை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை டெல்லி பார் கவுன்சில் வன்மையாக கண்டித்துள்ளதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்களை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம், தெற்கு டெல்லியில் உள்ள சாக்கேட் நீதிமன்ற வளாகத்தில், மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து பெண்ணை, எதிர் தரப்பைச் சேர்ந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் நினைவை விட்டு நீங்குவதற்குள் தற்போது வழக்கறிஞர்களுக்குள் இடையேயான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.