காதலியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு உயிரை மாய்த்த தாம்பரம் விஜய் மக்கள் இயக்க தலைவர்
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே புலிகொரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. லாரி ஓட்டுநரான இவர், தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக பதவி வகித்தார். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாயார் சின்னம்மாவிடம் மதுபோதையில் தகராறு செய்து விட்டு, தாம்பரம், திருநீர் மலை சாலையில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூற்ப்படுகிறது. நேற்று அதிகாலை மது போதையில் அந்தப் பெண்ணிடம் வீடியோ காலில் கருப்பசாமி பேசிக்கொண்டிருந்தார். அந்நேரத்தில், மாணவியின் தாயார் வருவதாகக் கூறி அப்பெண் அழைப்பை துண்டித்து விட்டதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து, கருப்பசாமியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது நீண்ட நேரமாக அழைப்பை எடுக்கவில்லை. இது குறித்து, அந்த மாணவி கருப்பசாமி தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கருப்பசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.