சண்டையில் கலவர பூமியான சூடான்..பீதியில் மக்கள்.. இந்தியர்களுக்கு வார்னிங்..! பதற்றமான சூடானில் நடப்பது என்ன?
ராணுவத்துக்கும், துணை ராணுவ படைக்கும் இடையிலான சண்டையில் கலவர பூமியாக காட்சியளிக்கும் சூடானில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
எங்கு திரும்பினாலும் துப்பாக்கி சூடு... பற்றி எரியும் கட்டிடங்கள்... அணி வகுக்கும் ராணுவ டாங்கிகள்... போராட்டங்கள் என கலவர பூமியாக காட்சியளிக்கிறது சூடான்..
இதற்கான காரணம் என்ன...? என்றால் ஒற்றை வரியில் சொல்லலாம் அதிகாரத்திற்கான போர் என்று. ஆம் சூடானில் இப்போது நடப்பது அந்நாட்டு ராணுவம் - துணை ராணுவம் இடையிலான ஒரு அதிகார போராகும். இதற்கு மத்தியில் ஜனநாயக தேர்தல் கோரி போராடுகிறார்கள் மக்கள்...
கிழக்கு ஆப்பிரிக்காவின் குட்டி நாடான சூடானில் உள்நாட்டு போர் என்பது புதியது அல்ல... தெற்கு சூடான், வடக்கு சூடான் என எண்ணற்ற உள்நாட்டு மோதல்களை கண்ட சூடானில், கடந்த 2019 ஆம் ஆண்டு அதிபர் ஒமர் அல்-பஷீர் ஆட்சி அகற்றப்பட்டது.
அல்-பஷீரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் வென்றதும், புதிய அரசை அமைக்க ஜனநாயக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை 2021 அக்டோபரில் ராணுவம் கைப்பற்றியது. இது ஜனநாயகம் கோரிய மக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்ட, போராட்டம் வெடித்தது, இதனால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டது.
விவசாயம், வர்த்தகம், எண்ணெய் வளம் எல்லாவற்றிலும் ராணுவ அதிகாரம் மேலோங்கியது. இதற்கிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக எண்ணற்ற கிளர்ச்சி குழுக்களும் போராட தொடங்கின.
இப்போது இந்த வரிசையில் ஆட்சியில் இருக்கும் ராணுவத்திற்கு எதிராக துணை ராணுவப்படை களமிறங்கியிருக்கிறது. Rapid Support Forces எனப்படும் சூடானின் துணை ராணுவப்படையும் அங்கு பலம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது.
இருதரப்புக்கும் இடையிலான சண்டையில்தான் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
இதற்கு மத்தியில்தான் ஊழல், பசி, பட்டினி, வறுமையை மட்டும் பார்த்த மக்கள், என்று ஜனநாயகம் மலரும் என்ற மன வேதனை போராட்டத்தில் கருகி வருகிறார்கள்.