ஹாஸ்பிட்டலில் அக்கா?.. ஓடிவந்த தம்பி... கட்டிலில் கட்டி முகம் சிதைந்து கிடந்த கொடூரம் - தென்காசியை அதிரவிட்ட அதிபயங்கரம்

x

தென்காசியில், முகத்தை சிதைத்து கை கால்களை கட்டிய நிலையில், பூட்டியிருந்த வீட்டில் பெண் உயிரிழந்து கிடந்த அதிர்ச்சி சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

தென்காசி நடுமாதாங் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா, பீடி சுற்றும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

சந்திரன் மதுபோதைக்கு அடிமையான நிலையில், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சந்திரனின் வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையேதான், சித்ராவின் தம்பியான குற்றாலநாதன் என்பவர், சந்திரனுக்கு போன் செய்து அக்கா குறித்து நலம் விசாரித்துள்ளார்.

அப்போது பதில் சொல்ல தடுமாறிய சந்திரன், சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளதாக கூறி, செல்போனை துண்டித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத அக்காவை சந்திக்க, குற்றாலநாதன் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால், வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே, குற்றாலநாதனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, போலீசாரை வரவழைத்த குற்றாலநாதன், அவர்களது முன்னிலையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது, பேரதிர்ச்சியில் மூழ்கினார்.

கட்டிலில் சித்ராவின் கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு திகைத்துப் போனார்.

சிறிது நேரம் முன்புதான், அக்காவின் கணவரான சந்திரனுக்கு போன் செய்தபோது, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவனையில் இருப்பதாக கூறிய நிலையில், முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது எதிர்பார்க்காத நிகழ்வாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை நடந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சித்ராவின் கணவர் சந்திரனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்