காங்.க்கு விஷப் பரீட்சையாகும் முதல்வர் தேர்வு.. ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு ஆபத்து.. கர்நாடகாவை எப்படி கையாளப்போகிறது?

x


காங்கிரசை பொறுத்தவரையில் முதல்வர் தேர்வு... ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு ஆபத்தாகவே இருக்கிறது வரலாறு. அண்டைய மாநிலமான புதுச்சேரியே உதாரணம்.

புதுச்சேரியில் நமச்சிவாயம் விலகல் - ஆட்சி பறிபோனது

2016-ல் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் வெற்றிப்பெற, முதல்வர் பதவியை வசமாக்கினார் நாராயணசாமி. தொடர்ந்து உட்கட்சியில் விரிசல் அதிகரித்து நமச்சிவாயம் பாஜகவுக்கு செல்ல நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது. 2021-ல் ஆட்சியை என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடம் பறிகொடுத்தது காங்கிரஸ்..

ம.பி.யில் சிந்தியா விலகல் - காங். ஆட்சி பறிபோனது

இதில் மத்திய பிரதேசத்தை மறக்கவே முடியாது.. 2018-ல் 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்றியது காங்கிரஸ். பிரசாரக்குழு தலைவராக இருந்து கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து கட்சியை அரியணைக்கு ஏற்றிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். கடைசியில் முதல்வர் பதவி கமல்நாத்திற்கு வழங்கப்பட, 2020-ல் காங்கிரசிலிருந்து விலகிய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

ராஜஸ்தானில் கெலாட்- பைலட் மோதல் தொடர்கிறது

சிந்தியா போல் ராஜஸ்தானில் காங்கிரசை வலுப்படுத்த அனுப்பப்பட்டவர் கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட்... ஆனால் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவி அசோக் கெல்லாட்டிற்கு வழங்கப்பட்டது. இன்றும் அங்கு பைலட்-கெலாட் மோதல் தொடர்கிறது.

பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் நீக்கம் - ஆட்சி பறிபோனது

பஞ்சாப்பிலும் நடந்த பலப்பரீட்சையில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. 2017 அமரீந்தர் சிங் தலைமையில் ஆட்சியமைத்த காங்கிரஸ், 2021-ல் அவரை நீக்கி சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியது. இதற்கு பின்னால் இருந்தது கட்சியின் மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து. இறுதியில் அமரீந்தர் சிங் வெளியேற, மாநிலத்தை ஆம் ஆத்மி தட்டிச் சென்றது.

பிஸ்வா சர்மாவும் காங்கிரசில் இருந்து விலகியவர் வடகிழக்கில் பாஜகவை வலுப்படுத்தியிருக்கிறார்

இப்போது பாஜக பிரசார பீரங்கியாக இருக்கும் அசாம் முதல்வர் பிஸ்வா சர்மாவும் காங்கிரசிலிருந்து விலகியவர்தான்... முதல்வர் பதவி விவகாரத்தில் தருண் கோகாய், காங்கிரஸ் தலைமையுடன் உரசல் ஏற்பட 2015-ல் கட்சியிலிருந்து விலகியவர் பாஜக சென்றார். பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர், வடகிழக்கிற்குள் காங்கிரஸ் செல்ல முடியாத அளவிற்கு பாஜகவை வலுவாக்கியிருக்கிறார்.

முதல்வர் பதவி விவகாரத்திலே ஜெகன் விலகல் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது ஆந்திர முதல்வர்...

முதல்வர் பதவி தொடர்பான மோதலிலே காங்கிரசிலிருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை தொடங்கி ஆந்திராவில் முதல்வராக இருக்கிறார். இப்படி முதல்வர் தேர்வில் பல கசப்பான அனுபவங்களையே எதிர்கொண்டிருக்கும் காங்கிரஸ், கர்நாடகாவை எப்படி கையாளப்போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்