களேபரத்தில் முடிந்த 'காதல் ... போராட்டக்களமான போலீஸ் ஸ்டேஷன் - மண்டையை பிய்த்துக்கொள்ளும் போலீசார்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் காதலியை பிரிந்த காதலனை விசாரணைக்கு அழைத்த காவல் ஆய்வாளர், அவரை கட்டாயப்படுத்தி காதலியுடன் திருமணம் செய்து வைத்ததாக இளைஞரின் குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
ஆத்தூர் அருகே சக்திநகர் புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் விக்னேஷ். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தீபிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் லிவ் இன் உறவில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென தன்னுடன் பேசுவதை நிறுத்தி பிரிந்து சென்ற விக்னேஷ் மீது தீபிகா போலீசில் புகாரளித்துள்ளார். இதில், இருவரையும் விசாரணைக்கு அழைத்த ஆத்தூர் மகளிர் காவல் ஆய்வாளர் தமிழரசி, இருவரையும் எச்சரித்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தரமணியில் இருவரும் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், போலீசார் செய்து வைத்த திருமணம் செல்லாது எனக் கூறி தீபிகாவை விட்டு விக்னேஷ் பிரிந்து சென்றுள்ளார். இதனால், விக்னேஷை தேடி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தீபிகா, அங்கு வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.