ராகுல்காந்தி எம்.பி பதவி பறிப்பு - தமிழ்நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். ராகுல்காந்திக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்ட பேரவையில் நாளை கருப்பு உடை அணிவகுப்பு நடத்தி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாக செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழையபேட்டை காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
போருரில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்தனர். வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மவ்லானா கலந்து கொண்டு மத்திய அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக கடுமையாக சாடினார்.
புதுக்கோட்டை திலகர் திடலில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத அறவழி போராட்டத்தை நடத்தினர். 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்