ஊருவிட்டு ஊரு தாண்டி உண்டி பணம் குருவியை மடக்கி பலியாடாக்கிய போலீஸ்
கடந்த 13 ஆம் தேதி குருவியாக வேலை பார்க்கும் அழகுராஜா என்பவரிடம், போலீசார் எனக்கூறி ஒரு கும்பல் 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக, அழகுராஜா எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 30 லட்சம் ரூபாய் கொண்டு வந்த அழகுராஜா மீது, போலீசார் சந்தேகமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, வழிப்பறி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முஷ்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் விரைந்து சென்று கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஆகமொத்தம் இந்த கொள்ளை சம்பவத்தில், ஆயுதப்படை காவலர் செந்தில், ராஜ்குமார் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதில், வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க சென்றவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்கு அனுப்பும்போது, பல்வேறு பிடித்தங்கள் போக பணம் குறைவாகவே குடும்பத்துக்கு செல்கிறது என்ற காரணத்தினால், உண்டி என்கிற முறையில் பணத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்வது தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தை வட சென்னை பகுதியில் இருக்கும் ஹவாலா தரகர் மூலமாக, இந்திய பணமாக மாற்றி, வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களின் குடும்பங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் பல்வேறு குருவிகள் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதில் குருவிகளுக்கென தனியாக whatsapp குழுக்கள் அமைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் ஹவாலா மூலம் பரிவர்த்தனை செய்யப்படுவதும், அந்தக் குழுவில் இருக்கும் பசுபதி மற்றும் அழகுராஜா, ராஜ்குமார் ஆகிய 3 பேரும் முட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், பசுபதி மற்றும் ராஜ்குமார் இணைந்து, குருவிகள் கொண்டு வரும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது. அதற்காக, டிராவல்ஸ் நடத்தும் கண்ணன் என்பவரிடம் இருந்து அந்த இருவரும் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும், அதே ஊரைச் சேர்ந்த காவலர் செந்தில் என்பவரை பயன்படுத்தி, இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீசாரின் விசாரணையில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அதாவது, ஹவாலா பணம் என்பதால் புகார் அளிக்க மாட்டார்கள் எனவும், காவலர் என்பதால் சந்தேகம் வராது என்ற அடிப்படையில், இந்தத் திட்டத்தை அந்த கும்பல் கச்சிதமாக தீட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் செந்தில் மற்றும் ராஜ்குமார் கண்ணன் ஆகியோரை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.