கேதார்நாத்தில் கட்டாயபடுத்தி குதிரைக்கு கஞ்சா கொடுத்த நபர்கள்... வைரலாகும் வீடியோ

x

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் குதிரையை கட்டாயப்படுத்தி கஞ்சா புகைக்கச் செய்த நபர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 'சார்தாம் யாத்திரை' மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியில் இருந்து இந்த யாத்திரை தொடங்கிய நிலையில் உத்தரகாண்டில் உள்ள நான்கு புனிதத் தலங்களான யமுனோத்ரி , கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்கு புனித யாத்திரைக்கு மக்கள் படையெடுத்து செல்கின்றனர்

இந்த யாத்திரையை இந்துக்கள் மிகவும் முக்கியமாக கருதும் நிலையில்,ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரையை கால் நடையாகவும், குதிரை சவாரி மூலமாகவும் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு சார்தாம் யாத்திரைக்காக சுமார் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உத்தரகாண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைதளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில், யாத்திரைக்குப் பயன்படுத்தப்படும் குதிரைக்கு இருவர் கஞ்சாவை புகைக்க வைக்க கட்டாயப்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பாக சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குதிரையை கஞ்சா புகைக்க இருவர் கட்டாயப்படுத்தும் அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர்.

அதிர்ச்சி அளிக்கச் செய்யும் அந்த வீடியோவில், இரண்டு பேர் தங்கள் கைகளைக் கொண்டு குதிரையின் வாய் மற்றும் ஒருபுற மூக்கை மூடி, மற்றொரு மூக்கின் வாயிலாக குதிரையை கட்டாயப்படுத்தி கஞ்சாவை புகைக்கச் செய்கின்றனர்.பெரிதும் போராடிய குதிரை வேறு வழியின்றி புகையை உள்ளே இழுத்து வெளியேற்றுகிறது.இந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் குதிரைகள் களைப்பு தெரியாமல் அதிகம் வேலை செய்வதாலும், காயம் அடைந்தாலும் உணர்வுகளின்றி தொடர்ந்து வேலை செய்வதாலும் இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்