க்ரீன் சிக்னல் கொடுத்த மஸ்க்.. ட்விஸ்ட் அடித்த டிரம்ப்

x

அரசியல் அதிரடியான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ட்விட்டரில் 8.8 கோடி பேர் பார்வையாளர்களாக இருந்தனர்.

ஆனால் வெறுப்புப்பேச்சு, அவதூறு, வரம்புமீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவரின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி முடக்கப்பட்டது.

அதையடுத்து ட்விட்டரை மஸ்க் விலைபேசத் தொடங்கியபோதே, டிரம்ப்பின் கணக்கை முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்போவதாக, கடந்த மே மாதம் கூறியிருந்தார்.

இந்த மாதம் ட்விட்டர் உரிமையாளராக மஸ்க் அதிகாரபூர்வ மாக மாறியநிலையில், டுவிட்டரில் உள்ளடக்க ஒழுங்கு முறைக் குழு அமைக்கப்படும் என்றும் அதன் மூலமே முடக்கப்பட்ட கணக்குகள் பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அப்படியொரு குழு பற்றி எந்தத் தகவலும் வராதநிலையில், நகைச்சுவை நடிகர் கேத்தி கிரிஃபினின் ட்விட்டர் கணக்கை கடந்த சனிக்கிழமை முடக்கத்திலிருந்து விடுவித்தனர்.

இதையடுத்து, டிரம்பின் கணக்கும் விடுவிக்கப்பட்டது. முடக்கம் நீங்கிய ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் டிரம்பின் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்தனர்.

முன்னதாக இதுகுறித்து டுவிட்டரில் எடுக்கப்பட்ட சர்வேயில், 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததை வைத்து, டிரம்பின் கணக்கை முடக்கத்திலிருந்து நீக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் டிரம்ப்போ மீண்டும் ட்விட்டருக்கு வருவதில் தனக்கு ஆர்வம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் டிரம்பின் சொந்த நிறுவனம் உருவாக்கிய ட்ரூத் சோசியல் எனும் சமூக ஊடகத்தில் மட்டும் அவர் கவனம் செலுத்திவருகிறார். அதில் அவரின்பக்கத்தில் 45. 7 லட்சம் பேர் தொடர் பார்வையாளர்களாக சேர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்