ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பு.. - ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள்

x

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ரயில் ரயில் விபத்துகளிலேயே மிக மோசமான விபத்து இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரினமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1956 நவம்பரில், தமிழகத்தில், அரியலூர் அருகே நடந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று, அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். 1964ல் நேரு மறைந்த பின், இந்திய பிரதமராக பதவியேற்றார்.1999 ஆகஸ்ட்டில், அசாம் மாநிலம் கைசாலில் நடந்த ரயில் விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். அன்றைய வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ் குமார், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். பின்னர் அவர் பீகார் முதல்வராகி, இன்று வரை முதல்வராக தொடர்கிறார்.

2000ஆம் ஆண்டில் நடந்த இரண்டு ரயில் விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று, அன்றைய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால் அவரின் ராஜினாமாவை அன்றைய பிரதமர் வாஜ்பாயி ஏற்க மறுத்ததால், ரயில்வே அமைச்சராக மமதா பானர்ஜி தொடர்ந்தார். 2011 முதல் மேற்கு வங்க முதல்வராக இருந்து வருகிறார். அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான், இன்றைய ரயில்வே அமைச்ச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்