கதவு ஏறி குதித்து உள்ளே சென்று.. புதுச்சேரி முதல்வர் முன்னே அதிகாரியை திட்டிய MLA - பரபரப்பு வீடியோ காட்சி
புதுச்சேரி அருகே அரசு விழாவின் போது, முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரியை திட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீது, இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, உருளையாண்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ-வாக பதவி வகிப்பவர் நேரு. இவர், முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர் ஆவார். இந்நிலையில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை எனக் கூறி, எம்எல்ஏ நேரு தலைமையிலான பொதுமக்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவரான தலைமை செயலாளரை சந்திக்கச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே, கம்பன் கலையரங்கில் நடைபெற்ற உலக சுற்றுசுசூழல் நிகழ்விற்கு முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். இதையறிந்த எம்எல்ஏ நேரு, இந்த விழாவிற்குள் அத்துமீறி நுழைந்து, முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.