விட்டதை பிடிக்க நினைத்த இளைஞர்.. கடைசியில் உயிரையே விட்ட சோகம்.. ஆன்லைன் ரம்மிக்கு அடுத்த பலி
தமிழகத்தில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வப்போது உயிர்ப்பலி வாங்கி வரும் ஆன்லைன் ரம்மியால், மீண்டும் ஒரு சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர், மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக சொல்லப்படுகிறது.
தொடக்கத்தில் பணத்தை வென்றாலும், அடுத்தடுத்த மாதங்களில் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்துள்ளார் குணசீலன்.
ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான குணசீலன், லட்சக்கணக்கில் கடன் வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடன் அதிகமானதை அடுத்து, அதனை சமாளிக்க முடியாமல் குணசீலன் தவித்து வந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த குணசீலன், தான் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு, குணசீலன் உடன் பணியாற்றிய அவரது சகோதரரிடம், இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குணசீலன், கடன் தொல்லையால் செய்வதறியாது தவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததன் காரணமாகவே, இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
ஆன்லைன் ரம்மியால் உயிர் பலிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு உரிய தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே பிரதானமாக வைக்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு முன், அதன் விபரீதத்தை உணர்ந்து புரிந்துகொண்டால், இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க முடியும்...