"கருத்து இருக்கட்டும், முதலில் காசை கட்டுங்க..."- அரசியல்வாதிடம் எலான் மஸ்க் கறார்...!

x

முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதும், அவர் தொழில்நுட்ப ரீதியாக என்னென்ன மாற்றங்களை எல்லாம் கொண்டுவரப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ட்விட்டரை வாங்கியதும் ஊழியர்கள் தலையில் கையை வைத்த மஸ்க் கண்ணில் பட்டிருப்பது புளு டிக் கணக்குகள்தான்... ஆம் புளு டிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 662-யை கட்ட வேண்டும் என கூறியிருக்கிறார். இதற்கான சலுகைகளை பட்டியலிட்டுள்ள அவர், காசு கொடுத்தால் தேடலின்போது உங்கள் பதிவு முன்வரும் எனவும் சொல்லிவிட்டார். நம்ம ஊர் ட்விட்டர் வாசிகளோ காசு கொடுக்க வேண்டாம்... உங்களது புளு டிக்கும் வேண்டாம்... என அதிரடியாக கருத்துக்களை பறக்கவிடுகிறார்கள். சிலர் இதுதான் சுதந்திரத்தை உறுதி செய்ய நீங்கள் எடுக்கும் நடவடிக்கையா...? என மஸ்கிற்கு கேள்விகளை அடுக்குகிறார்கள்... ஆனால் இதில் முன்வைத்த காலை பின் வைக்கப்போவது இல்லை என கறார் காட்டுகிறார் மஸ்க். உள்ளூர் கடையில் காசு கொடுத்தால் கையில தோசை என்கிற மாதிரி காசு கொடுத்தா புளு டிக் என்கிறார். இப்படியாக புளு டிக் பஞ்சாயத்து செல்ல, அமெரிக்க அரசியல்வாதியான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மஸ்க் நடவடிக்கையை ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு கோடீஸ்வரர் பேச்சு சுதந்திரத்தை மாதம் 8 டாலர் என்ற சந்தா திட்டம் மூலம் விற்க முயற்சிக்கிறார் என கடுப்பாக பதிவிட்டுள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுக்காது பதிலடி கொடுத்துள்ள மஸ்க், உங்களுடைய கருத்துக்கு பாராட்டுக்கள், முதலில் 8 டாலர்களை கட்டுங்க என காசை கீழே வைக்க சொல்லியிருக்கிறார். ட்விட்டர்-மஸ்க் பஞ்சாயத்து முடிந்து, இப்போது மஸ்க் ட்விட்டர் - ட்விட்டர் பயனாளர்கள் பஞ்சாயத்து தொடங்கிவிட்டதாக பலரும் இணையத்தை கேலி கருத்துக்களால் கலங்கடிக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்