கடலில் மூழ்கப்போகிறதா தமிழ்நாடு..? பகீர் கிளப்பும் ஆய்வு ரிப்போர்ட்...
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை வங்கக்கடல் விழுங்கிவருவதாக வெளியாகியிருக்கும் அதிர்ச்சி ஆய்வறிக்கை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு....
பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் உருகி, கடல்மட்டம் உயர்கிறது என்பது விஞ்ஞானிகளின் தொடர் எச்சரிக்கையாக இருக்கிறது. இந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மையானது என்பதை தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை வங்கக்கடல் எப்படி ஆக்ரோஷ அலைகளால் ஆக்கிரமிக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலையில்தான் நாம் பார்ப்பதைவிடவும் பாதிப்பு அதிகம் என்ற ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் NCCR இந்திய கடற்கரையில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது. 1990 முதல் 2018 வரையில் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் தரவுகளை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட அந்த ஆய்வில், கடல் அரிப்பு ஹாட்ஸ்பாட்கள் என அடையாளம் காணப்பட்ட 22 இடங்களில், தமிழ்நாடு ஆயிரத்து 802 ஹெக்டேர் நிலப்பரப்பை நிரந்தரமாக இழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அரிப்பால் திருவள்ளூர் மாவட்டம் 111.22 ஹெக்டேர் நிலபரப்பையும், சென்னை மாவட்டம் 5.03 ஹெக்டேர் நிலப்பரப்பையும், காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் 186.06 ஹெக்டேர் நிலப்பரப்பையும், விழுப்புரம் 43.49 ஹெக்டேர் நிலப்பரப்பையும், கடலூர் 108.43 ஹெக்டேர் நிலபரப்பையும் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 283.69 ஹெக்டேர், திருவாரூரில் 176.05 ஹெக்டேர், தஞ்சாவூரில் 50.13 ஹெக்டேர், புதுக்கோட்டையில் 67.98 ஹெக்டேர், ராமநாதரபுரத்தில் 413 ஹெக்டேர், தூத்துக்குடியில் 172.03 ஹெக்டேர், நெல்லை 15.29 ஹெக்டேர், கன்னியாகுமரியில் 169.54 ஹெக்டேர் நிலப்பரப்பை கடல் விழுங்கிவிட்டதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த கடலோர எல்லை நீளம் 999.47 கிலோ மீட்டர் ஆகும். இதில் 16.16 கிலோ மீட்டர் தொலைவு அதிகமான கடல் அரிப்பையும், 37.15 கிலோ மீட்டர் மிதமான கடல் அரிப்பையும், 369.63 கிலோ மீட்டர் குறைந்த கடல் அரிப்பையும் எதிர்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் கடல் மட்டம் உயரும் நிலையில், அதில் தமிழ்நாடு மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கான காரணம் குறித்து பேசியிருக்கும் என்சிசிஆர் இயக்குநர் எம்.வி. ரமண மூர்த்தி, காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார்.
வட கடலோர மாவட்டங்களில் வண்டல் ஏற்றத்தாழ்வு காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பல அணைகள் கட்டப்பட்ட பின்னர் கடற்கரைக்கு வண்டல் மண் வருவது குறைந்துவிட்டது எனக் கூறும் அவர், துறைமுகங்கள், அலைகளை தடுப்பதற்கான சுவர்கள் போன்ற கட்டுமானங்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது என சொல்கிறார். இதற்கு தீர்வாக துறைமுகங்களில் இருந்து எடுக்கப்படும் மணலை ஆழ்கடலில் கொட்டுவதை விட, கடல் அரிப்பு ஏற்படும் கரையில் கொட்டலாம் என்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹு, பாதிப்பை தடுக்க பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பாரிய பனைமர நடவுகளை மேற்கொள்வோம், இது மண் அரிப்பை தடுத்து, சதுப்புநிலப் பரப்பை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். துறைமுகங்களில் இருந்து எடுக்கப்படும் மணலை பயன்படுத்துவது குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.