கிடுகிடுவென உயர்ந்த விலை...தங்கத்தை ஓவர் டேக் செய்யும் தக்காளி - மக்களிடமே ஐடியா கேட்கும் மத்திய அரசு
கட்டுக்கடங்காமல் எகிறி வரும் தக்காளி விலை கிலோ 130 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில், மக்களிடமே ஐடியா கேட்டு வருகிறது மத்திய அரசு....தக்காளி விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
இந்திய சமையலறைகளில் இன்றியமையாத காயக்றிகளில் ஒன்றாகிவிட்ட தக்காளி விலை கடந்த சில தினங்களாக கட்டுக்கடங்காமல் எகிறுவருகிறது.
கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை சதமடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த அடுத்த தினங்களில் மேலும் மேலும் புதிய உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வெப்பம் அதிகரித்து, பருவமழை தாமதமாகி விவசாயிகளை கைவிட்டதால், தக்காளி உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. இதனாலயே தக்காளி விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதனால் 60 முதல் 80 ரூபாய்க்குள் ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. 100 ரூபாய்க்கு இந்த விலை எவ்வளவோ பரவாயில்லை என மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் கிடுகிடுவென விலை உயர்ந்து130 ரூபாயை எட்டியுள்ளது .
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக வரும் தக்காளி அளவில் 10 லாரிகள்வரை குறைவாக வருவதால், வரத்து குறைந்து விலை உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்த விற்பனை கடைகளில் கிலோ 90 ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில் 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிவருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே நிலை நீடிக்கிறது.
இந்த அதிரடி விலையேற்றத்தால், கோவை உணவக வியாபாரிகள் ஹோட்டல்களில் தக்காளி சட்னிக்கு தற்காலிக என்ட் கார்டு போட்டுள்ளனர்.
விலையேற்றத்தை விமர்சிக்கும் வகையில், உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு தக்காளி போல் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி கட்சி தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர். மேலும் விழாவிற்கு வந்தவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்களில் தக்காளிகளை வைத்து வழங்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டையே பரிதவிக்க வைத்துள்ள இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களிடமே யோசனையை கேட்க திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்த டெல்லியில் 'தக்காளி கிராண்ட் சேலஞ்ச் ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்த போட்டியில், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், தொழில் துறை வல்லுனர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு விலையேற்றத்தை குறைக்க தங்களது யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தக்காளி விலையேற்றம் தங்கத்திற்கே டஃப் கொடுப்பதாகவும், தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை தெரிக்க விடுகின்றனர் நெட்டிசன்கள்.
தக்காளி விலையை உடனே கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.