DKS முதல் செந்தில்பாலாஜி வரை.. பின்னணியில் இருந்த ED-யின் மூளையை பதவியை விட்டே தூக்கிய உச்ச நீதிமன்றம் - ஷாக்கில் மத்திய அரசு
அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு மூன்றாவது முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில்,இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வருமான வரித்துறையின் முன்னாள் கமிஷ்னரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018 நவம்பரில் அமலாக்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
பதவிக்கால விதிமுறையின் படி, சஞ்சய் குமாரின் பதவிக்காலம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே முடிவடைந்திருக்க வேண்டும்.
ஆனால் அமலாக்கத்துறையில் ஒரு வருட பணி சேவை நீட்டிப்பை பெற்ற முதல் நபர் எஸ்.கே.மிஸ்ரா தான்.
அதன் பிறகும் அடுத்தடுத்து பணி நீட்டிப்பு என மூன்று முறை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அவசர அவசரமாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட திருத்தம் இதற்கு கை கொடுத்தது.
இவரது பதவி காலம் முதல் முறை நீட்டிக்கப்பட்ட போதே... எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
குறிப்பாக அமலாக்கத்துறை சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தனக்கு சாதகமாக ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது.
அமலாக்கத்துறை இயக்குனராக மிஸ்ரா பதவி வகித்தபோதே சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லியின் சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா முதல் தற்போது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வரை பல்வேறு உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவின் பதவி காலம் நீடிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு.... மிஸ்ராவின் பதவி காலத்தை மேலும் நீட்டிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள மிஸ்ராவின் பதவி காலத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் மாதம் மிஸ்ராவின் பதவி காலம் முடிவடையும் நிலையில், வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே அவர் பதவியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.