ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஒ சந்தா கோச்சார் கைது.. | ICICI Bank |
விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ கைது செய்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்துக்கு ஆயிரத்து 875 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. இதில் விதிமீறல்கள் நடந்ததாகவும், வழங்கப்பட்ட கடன் வாராக்கடன் ஆகிவிட்டதால் வங்கிக்கு ஆயிரத்து 730 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு, சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மை, வங்கியின் பொருளாதார நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார் என அறிக்கை தாக்கல் செய்தது. வீடியோகான் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் சந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்தில் 67 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்தது. இதில் அமலாக்கப்பிரிவு விசாரணையை அடுத்து, ஆய்வை மேற்கொண்ட சிபிஐ மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தது. இப்போது இந்த வழக்கில் சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ கைது செய்துள்ளது.