ஈபிஎஸ் வழக்கில் 10 நாள் டைம் குறித்த தேர்தல் ஆணையம்
அதிமுகவில் திருத்தப்பட்ட விதிகளை பதிவேற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனு மீது பத்து நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காவிட்டால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷிந்திர குமார் நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி அதிமுக மற்றும் ஈபிஎஸ் அளித்த விண்ணப்பத்தின் மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, ரிட் மனுவை முடித்து வைத்தார். இந்த நிலையில், நேற்று வெளியான உத்தரவில், திருத்தப்பட்ட கட்சி விதிகளை பதிவேற்றக்கோரி அதிமுக, எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனு மீது பத்து நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காவிட்டால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை ஈ.பி.எஸ் நாடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.