தேர்தல் ஆணையம் சொன்ன பதில்... அதிர்ச்சியில் உறைந்த ஈபிஎஸ் தரப்பு - தீர்ப்பு என்ன...? எகிறும் எதிர்பார்ப்பு
2022 ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது.
இதனையடுத்து நடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது; இரட்டைத் தலைமையே தொடரும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு செப்டம்பர் 2 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
ஈ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. பலகட்ட விசாரணைக்கு பிறகு கடந்த மாதம்11 ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஈபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஈபிஎஸ் கையெழுத்திட்ட, அதாவது இரட்டை இலை சின்னம் கோரும் வேட்புமனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியிருந்தது.
இந்த இடையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்க ஜனவரி 30 ஆம் தேதி உத்தரவிட்டது. ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்த நிலையில், தேர்தல் ஆணையமும் தனது பதிலை சமர்பித்துள்ளது.
அதில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தலை நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.