இறுதி நொடியில் ட்விஸ்ட் வைத்த ED.. அமைச்சர் பொன்முடி ரெய்டில் திடீர் திருப்பம்.. திக்..திக்.. நிமிடங்கள்

x

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், நள்ளிரவு வரை நீடித்த, அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை பற்றிய பரபரப்பு நிமிடங்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு....

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை கைது செய்த திகைப்பு அடங்குவதற்கு முன்பே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்தி அதிரடி காட்டியிருக்கிறது அமலாக்கத்துறை....

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சி காலத்தில், கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்தான் அமைச்சர் பொன்முடி. பின்னர் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக ஆட்சியை பிடித்தது. அந்த நேரத்தில், அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரியில் மண் எடுக்க அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசுக்கு 28 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டில் பொன்முடி மீதும், அவரது மகன் கௌதம் சிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் 2021ல் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து, அமைச்சர் பொன்முடி அதிரடி காட்டினார்.

இதற்கிடையே பழைய செம்மண் வழக்கை தூசி தட்டியது அமலாக்கத்துறை. ஜூலை 17 அன்று காலை 7 மணிக்கே பொன்முடி தொடர்பான இடத்திலும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணிக்கு சொந்தமான கயல் பொன்னி நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டது அமலாக்கத்துறை.

அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் சோதனை தொடர்ந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு, பொன்முடியை அழைத்துச் சென்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் இதே போல தொடர் சோதனைகள் நடந்தது, பின்னர் நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டார். அதே பாணியில்தான் பொன்முடியும் கைது செய்யப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில், அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக இருந்த 7 மணி நேரமும் பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. விடிய விடிய நடந்த விசாரணையின் இறுதியில், அமைச்சர் பொன்முடியின் மீது கைது நடவடிக்கை இல்லை என தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அதிகாலை 3:30 மணிக்கு அளவில் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி. அதே நேரத்தில் அவரது வீட்டில் நடந்த சோதனையும் முடிவுக்கு வந்தது. பிரச்சினை இதோடு முடியாது என்பதை போல, செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்துள்ளனர். அவரது மகன் கவுதம சிகாமணியும் மாலை 6 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

"ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் பொன்முடி"

"ஒரு வாரம் ஆளுநர் டெல்லி சென்ற பின் ரெய்டு"

"திமுகவிற்கு விடப்பட்ட நேரடி மிரட்டல்"

"அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் பொன்முடி"

"அதிகாலை 3.30 மணி வரை விசாரணை- மனித உரிமை மீறல்"

"இன்று மாலை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்"

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதிர்கட்சிகள் தங்கள் அணியை வலுப்படுத்தி வருகின்றன. அதை குழைப்பதற்காக, பாஜகவினர் இது போன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் கண்டனங்களை முன்வைத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்