"எத்தனை நாளானாலும் அவருக்காக காத்திருப்போம்" ""கைதானவர் தாலி எடுத்து கொடுத்தால்..." - வைராக்கியத்துடன் காத்திருக்கும் மணமக்கள்
வேலூர் மாவட்டம் குருமலை அருகே நாட்டமை வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான், திருமணம் செய்து கொள்வோம் என மணமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கல் மலை கிராமத்தை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் அரசனூர் பகுதி சேர்ந்த ரோஷினி என்பவருக்கும் கடந்த ஒன்பதாம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் ஊரான் எனப்படும் நாட்டாமை தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் வழக்கமாகும். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதியன்று, ஊரான் சங்கர் என்பவர் தாலி வாங்குவதற்காக, மலை கிராமத்திலிருந்து ஊசூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அவரைக் கண்ட வேலூர் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதாக கூறி, அரியூர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது 60 லிட்டர் சாராயம் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊரான் சங்கர் என்பவர் வந்து தாலி எடுத்து கொடுத்தால் திருமணம் செய்து கொள்வோம் என மணமக்கள் உறுதி பட தெரிவித்துள்ளனர்.