விபத்தில் சிக்கி துடிதுடித்த திமுக நிர்வாகி...சாமர்த்தியமாக காப்பாற்றிய விஜயபாஸ்கர்...ஆபத்தில் அரசியலை வென்ற மனிதம்..!
புதுக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த திமுக நிர்வாகியை காப்பாற்றி அவருக்கு முதல் உதவி அளித்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.... அரசியலை தாண்டிய நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இச்சடி என்ற இடத்தில் ஒரு காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து கிடந்தனர்.
அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார்.
விபத்தை அறிந்து அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று பார்த்த போது விபத்துக்கு உண்டான காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
அருகில் சென்று பார்த்தபோது, விபத்தில் சிக்கியவர், திமுக புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தையும் திமுக நிர்வாகிகளில் ஒருவரான கலியமூர்த்தி என்பது தெரியவந்தது.
கனப்பொழுதும் யோசிக்காமல் ஓடோடி சென்று அவரை மீட்டு முதலுதவி அளித்தார். அதே போல், எதிரே வந்த சரக்கு வாகன ஓட்டுநர் பால்ராஜும் விபத்தில் பலத்த காயமடைந்து இருப்பதும் தெரிய வந்தது. அவருக்கும் முதலுதவி அளித்த வர், பின்னர் அவர்கள் இருவரையும் தனது காரிலேயே ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவரையொருவர் பரம எதிரிகளாக பார்த்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சியினர் பகையை மறந்து நாகரீகத்துடன் நடந்து வருகின்றனர். அதற்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
விபத்தில் காயம் அடைந்தவர் திமுக நிர்வாகியாக இருந்தாலும் மனிதநேயத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் நடந்து கொண்ட விதம் அனைவரது பாரட்டையும் பெற்றுள்ளது