போட்டோகிராபர்ஸ்க்கு ஹார்ட் பிரேக்.. உண்டியலுக்கு போன கேமராக்கள் - திருப்பதி கோயிலில் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வரும் பக்தர்கள் அங்கு புகைப்படம் எடுத்துகொள்வதை பெரிதும் விரும்புவர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, அங்கு போட்டோகிராபர்கள் பக்தர்களை புகைப்படம் எடுத்து அதனை உடனடியாக பிரிண்ட் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு சிலருக்கு மட்டுமே தேவஸ்தானம் அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பலர் முறையான அனுமதியின்றி புகைப்படம் எடுத்து வருவதாகவும், இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் முறையான அனுமதியின்றி புகைப்படங்கள் எடுத்து வந்த போட்டோகிராபர்களின் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கோயில் உண்டியலில் செலுத்தப்பட்டன. கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், போட்டோகிராபர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். உண்டியலில் செலுத்தப்பட்டவை தேவஸ்தானத்திற்கே சொந்தம் என்பதால், இனி ஏலத்தின் மூலமாக மட்டுமே கேமராக்களை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.