ஏற்கெனவே ரூ.2.5 கோடி கொடுத்த CM ஸ்டாலின்.. அமெரிக்காவில் புதிதாக அறிவித்த PM மோடி - வெடித்த புது குழப்பம்
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசு நிதியில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அமெரிக்காவில் பிரதமர் மோடி அறிவித்தார். தமிழ் இருக்கையின் சிறப்பம்சங்கள் என்ன அதன் செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
செம்மொழியான தமிழ் மொழியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கும் தமிழ் மொழியை வளப்படுத்த முக்கிய முயற்சியாக பார்க்கப்படுவது தான் தமிழ் இருக்கை.
பொதுவாக பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட துறைக்காகவோ அல்லது மொழிக்காகவோ தனித்துறை அமைக்கப்படும். இதனை போலவே இருக்கையும் அமைக்கப்படும் ஆனால் இருக்கையின் செயல்பாடுகள் வேறுபடும்.
அதாவது ஒரு மொழிக்கான இருக்கையில், அந்த மொழியை பிரத்யேகமாக கற்பிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் என ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார். அவர் தலைமையில் சராசரி யாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சி களும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும்.
இதன் மூலம் மொழியின் தரத்தை மேம்படுத்துவதோடு, மொழி குறித்து ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் அதிகளவில் மேற்கொள்ள முடியும்.
உலகின் தொன்மையான தமிழ் மொழியை மேன்மேலும் வளர்த்து தழைத்தோங்க தலை சிறந்த பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. உலகளவில் தனி அங்கீகாரத்தை பெறுவதன் மூலம் தமிழரின் மதிப்பும் உயரும்.
உலகளவில் அமெரிக்காவின் ஹார்வார்டு, சிகாகோ, கொலம்பியா, டெக்சாஸ், போலந்தில் ஜாகிலோனியன், வார்சா, பெர்க்லி, லண்டன், டொரண்டோ, பெண்டிடிகன், சிங்கப்பூர், யேல், மிச்சிகன், சிங்கப்பூரின் எஸ்ஐஎம், பென்சில்வேனியா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் தமிழ் படிப்புகளும், இன்னும் சில பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளும் இருக்கின்றன. இதன் வரிசையில் தற்போது இணைந்துள்ளது ஹூஸ்டன் பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க அரசால் நிதியுதவி வழங்கப்படும். அதன் படி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவ தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுமார் 2.50 கோடி ரூபாயை தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கத்திடம் வழங்கினார்.
இருக்கை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் நிதி உதவியுடன் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் அறிவித்தார்.
இது தமிழ் மக்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் இருக்கை மீண்டும் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் இருக்கை நிறுவுவதன் மூலம் தனித்த அடையாளமும், உயர் கவுரவத்தையும் தமிழ் மொழி பெறும்.