சென்னை டூ அந்தமான் சென்ற விமானம்..- திருப்பி அனுப்பப்பட்டதால் பயணிகள் அவதி
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு பயணிகள் விமானம், பகல் 12 மணிக்கு 150 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது.
அந்தமான் வான் எல்லையை விமானம் கடந்து சென்ற போது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடி மின்னலும் இருந்ததால், அந்தமானில் தரையிறங்க முடியாமல் விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது. வானிலை சீரடையாததால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தமானில் இருந்து பயணிகள் விமானம் மீண்டும் மாலை 5:10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. மீண்டும் விமானம் வியாழன் காலை சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும் என, அறிவிக்கப்பட்டது. விருப்பமில்லாத பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். இதையடுத்து சில பயணிகள் மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொண்டனர்.