குகைக்குள் பல கோடி ரூபாய்... சென்னையில் என்ஐஏ பெயரில் கொள்ளை... விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள்
சென்னை முத்தையால்பேட்டையில், கடந்த 13-ஆம் தேதி, என்ஐஏ அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு வந்த ஒரு கும்பல், ஜமால் என்பவரின் வீடு மற்றும் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, 20 லட்ச ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றது. பணத்தை பறிகொடுத்த பிறகுதான், வந்தவர்கள் போலி அதிகாரிகள் என்று ஜமாலுக்குத் தெரிந்தது. கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதை இந்த கும்பல் சாதமாகப் பயன்படுத்தி, கொள்ளை அடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து, அந்த கும்பலைத் தேடி வந்த நிலையில், பாஜக நிர்வாகியான வேலு என்கிற வேங்கை வேந்தன் உட்பட ஆறு பேர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இரு தினங்களுக்கு முன் சரணடைந்தனர். கிண்டி குதிரைப் பந்தயத்தில் பணத்தை இழந்ததால், திட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர். இதுவரை 2 கோடியே 30 லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாகவும், அந்த பணத்தை குகை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பின்புலம் பற்றி ஆராய்வதற்காக, காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தை தனிப்படை போலீசார் அணுகி உள்ளனர்கள். அவர்கள் 6 பேரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, மண்ணடியில் ஜிம் பயிற்சியாளராக இருக்கும் முகமது பாசில் என்பவருக்கு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு கைவிலங்கு பூட்டி விசாரித்த போலீசார், அவரிடம் இருந்து, ஒரு கோடியே 50 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். மறுபுறம், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்திய போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜமாலின் செல்போன் கடையில் வேலை செய்த சித்திக் என்பவர் தான், இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது. ஜமாலிடம் அதிக பணப்புழக்கம் இருந்ததை தெரிந்து கொண்ட சித்திக், பாஜக நிர்வாகி வேலுவிடம் கூறி கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. மேலும், தனிப்படை போலீசார், கொள்ளையர்களைத் தேடிச் செல்லும் இடங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கும் சித்திக் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், எஞ்சியுள்ள பணம் யாரிடம் இருக்கிறது? இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விகளுடன் சித்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர், தனிப்படை போலீசார்.