சென்னை சாலைகளில் லிஃப்ட் கேட்டு 'பெண்' கை நீட்டினால் டூவீலர்களே உஷார்!..மோகத்தால் கிடைத்த சிறை கம்பி..!

x

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 24 தேதி பணியை முடித்துவிட்டு, செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

புழல் அருகே வந்தபோது, அவரிடம் பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். பெண்ணிற்கு உதவி செய்யலாம் என நினைத்து வண்டியை நிறுத்திய கணேஷ்குமாருக்கு, அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

எங்கே செல்ல வேண்டும் என பெண்ணிடம் கேட்க, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியை முதுகுப் பகுதியில் வைத்து பணம் கேட்டுள்ளனர்.

பணம் எதுவும் இல்லையென கணேஷ்குமார் கூற, கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது அந்த வழிப்பறி காதல் ஜோடி....

இது தொடர்பாக, புழல் காவல் நிலையத்தில் கணேஷ்குமார் புகார் அளித்தார்.

இதனிடையே, புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடி ஒன்று, போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளது.

சந்தேகமடைந்த போலீசார், அந்த இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று பிடித்தனர்.

ஜோடிப் புறாக்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் புழல் பகுதியை சேர்ந்த அபினேஷ் மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த வாணி என்பதும்... இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

கணேஷ்குமாரிடம் வழிப்பறி செய்த ஜோடியும் இதுதான் என்பது தெரியவந்தது.

ஆடம்பர வாழ்க்கை வாழ வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்ததாக காதல் ஜோடி கூற, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் விசாரணை நடத்தியதில், பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக இவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருப்பதும் கண்டறியப்பட்டது.

ஆளில்லாத நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களை நோக்கி காதலி கை காட்டுவார். பெண் என இரக்கப்பட்டோ... சபலப்பட்டோ... பெரும்பாலான வாகனங்கள் நின்று விடும். அப்போது காதலன் கத்தியோடு என்ட்ரி ஆவார்.

முடிந்தவரை மிரட்டி, கிடைத்ததை சுருட்டி... கிளம்பிவிடும் இவர்களின் வழிப்பறி பயணம்.

இந்த சக்ஸஸ் ஃபார்முலாவை கையில் வைத்துக் கொண்டுதான் சென்னை சுற்று வட்டாரத்தையே பல நாட்களாக சுரண்டி வந்திருக்கிறது இந்த காதல் ஜோடி.

பல நாள் திருடர்களான இவர்கள் தற்போது மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் இனி ஹைவேஸில் பெண் ஒருவர் லிஃப்ட் கேட்டால் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற படிப்பினையைத் தந்திருக்கிறது இந்த சம்பவம்.


Next Story

மேலும் செய்திகள்