கொட்டி கிடக்கும் அரசு வேலை...வாரி சுருட்டும் வட மாநிலத்தவர்கள் - "இனியும் இழக்காதே.. விழித்துக்கொள் தமிழா"
தமிழ்நாட்டில் பணி புரிவதற்கான ரயில்வே உடல் தகுதி தேர்வில் 90 சதவீதத்தினர் வடமாநிலத்தவர்களே கலந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் 1 லட்சம் கேங்மேன் பணிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு... கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் , செப்டம்பர் மாதம் தான் இதற்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டிருந்தது.
முதல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாவதாக உடல் தகுதி தேர்வானது நடத்தப்பட்டது.
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்வு திங்களுடன் நிறைவு பெறுகிறது.
இதில் தமிழகத்தில் பணிபுரிய விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாட்டின் ஒரே தேர்வு மையமான ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் பட்டாலியன் பயிற்சி மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இங்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், நாளொன்றுக்கு 500க்கும் குறைவான தமிழர்களே கலந்து கொண்டது தான் தற்போது பெரும் விவாத பொருளாகி இருக்கிறது.
இதற்கு காரணம்... மத்திய அரசின் தேர்வில் கலந்து கொள்ள தமிழர்கள் அதிகம் விருப்பம் காட்டததால்... தமிழர்களுக்கான வாய்ப்பு வட மாநிலத்தவர்கள் வசம் சென்றுவிடுகிறது.
இது குறித்து தமிழக இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே... வருங்காலங்களில் மாநில அரசு துறைகளில் மட்டுமின்றி மத்திய அரசு துறைகளிலும் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பை அவர்கள் சரியாக முறையாக பயன்படுத்தி கொள்வார்கள்.