எலி தொல்ல தாங்க முடியவில்லையா? எலியை கொன்றவர் மீது வழக்குப்பதிவு
உத்திரபிரதேசத்தில் எலியை சாகடித்த குற்றத்திற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வினோதமான இந்த வழக்கில் நடந்தது என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
எலி தொல்ல தாங்க முடியலனு... எலியை விரட்ட எலி பொறி வாங்குறது... எலி மருந்து பயன்படுத்துறதுனு... நொந்துட்டு வர்ற மக்கள் கூட்டம் ஏராளம்.
நம்ம ஊர்ல மட்டுமல்ல... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளை கொல்றதுக்கு ஆபீஸர் கூட நியமன செய்திருக்காங்கனா பாத்துக்கோங்க...
இரவு நம் வீடு புகுந்து ஓட்டம் காட்டிய எலிகளை... எலி வலை வச்சு புடிச்சி... 'என்னையா தொல்லை பண்ணுற' அப்படின்னு அத ஒரு கை பாக்குறவங்கள பார்த்திருப்போம்.
ஆனா இங்க... எலியை சாகடித்ததற்காக ஒரு நபர் மீது 30 பக்க குற்ற பத்திரிக்கை தாக்கல் செஞ்சிருக்காங்க உத்திர பிரதேச மாநில போலீசார்.
அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவராக நீதிமன்றம் சென்று சரணடைந்து... தற்போது முன்ஜாமின் பெற்று வெளியே வந்திருக்காரு.
ஆனா இவர் மீது பதியப்பட்ட வழக்கின் மூலம் 2000 ரூபாய் வரைக்கும் அபராதமும் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் அவருக்கு விதிக்க முடியும்னு சட்டம் சொல்லுது.
இப்படி நாட்டிலேயே முதல்முறையாக எலியை கொன்றதற்காக வழக்கில் சிக்கி இருக்கும் இந்த நபரின் பெயர் மனோஜ் குமார்.
உத்திரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளியாக இருக்கும் இவரோ... நான் எலியை கொல்லவில்லை... என்னோட மூன்று குழந்தைகள் தான் தெரியா தனமாக எலியை கொன்று விட்டார்கள் நான் அதை கட்டி சாக்கடையில் மட்டும் தான் போட்டேன் என்கிறார்.
எலியை கொன்றதற்காக வழக்கு பதிவு செய்ய முடியுமா ? என்று போலீசாரிடம் கேட்ட போது, எலியை கொன்றதற்காக இல்லை... எலியின் வாலை செங்கலில் கட்டி அதை தலைகீழாக தொங்கவிட்டு, சாக்கடையில் மூழ்கடித்து, மூச்சு திணற வைத்து கொடூரமாக கொன்றதால் விலங்குகள் நல ஆர்வலர் விஜேந்தர் அளித்த புகாரின் பேரில்... எலியை கொடுமைப்படுத்திக் கொன்றதற்காக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்கிறார்கள்.
இதற்கான வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் புகார் கொடுத்தது மட்டுமல்லாமல்... செத்த எலியின் உடலை தனது ஏசி காரில் போலீசாருடன் பிரேத பரிசோதனைக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இந்த விலங்கு நல ஆர்வலர் விஜேந்தர்.
பிறகு பரிசோதனையில் எலி மூச்சு முட்டி இறந்தது தெரிய வரவே... அடுத்து ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார்கள், போலீசார்.
எலியை கொன்றது குற்றம் என்றால் கோழி ஆடு மீன் போன்றவற்றை கொல்பவர்களையும் உண்பவர்களையும் என்ன செய்வார்கள்? கடையில எலி மருந்து விற்கறவங்கள கைது செய்ய முடியுமா? ஆராய்ச்சிகளில் எலிகளை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? இது என்ன கொடுமையா போச்சு என்று குமுறும் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் குமாரின் தந்தை... என் மகனை தண்டித்தால் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று கொதித்துப் போய் இருக்கிறார்.
இப்படி எலியை கொன்றதற்காக குற்ற வழக்கில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சிக்கி இருப்பது வினோதமாகவும் அதே நேரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.