மயானத்தில் பர்த்டே செலிப்ரேஷன்... பிளக்ஸ் பேனர்,கேக்,பிரியாணி 100-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள்...
விதம்விதமாகப் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், மகாராஷ்டிராவில் சுடுகாட்டில் ஒருவர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
மகராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், கல்யாண் பகுதியில் வசிப்பவர், கௌதம் ரத்தன் மோரே. பயண ஏற்பாட்டுத் தொழில் நடத்திவரும் இவர், கடந்த 19ஆம் தேதியன்று 54ஆவது பிறந்த நாள் வந்தது. அதை ஓட்டலில் கொண்டாடலாம் என குடும்பத்தினர் கூற, கௌதம் ரத்தனோ வித்தியாசமாகக் கொண்டாட முடிவுசெய்தார்.
அதன்படி, கல்யாண் பகுதியில் உள்ள சுடுகாட்டில், அவர் தன் குடும்பத்தினர், நண்பர்களுடனும் பிறந்த நாளைக் கொண்டாடினார். குழந்தைகள், பெரியவர்கள் என 100 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், கௌதமின் பிறந்த நாள் பேனர் ஒன்று பெரிதாக வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேக்கும் பிரியாணியும் வழங்கப்பட்டது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என விரும்புவதாகவும், அதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்துக் காட்டவேண்டும் என்பதற்காகவே, இப்படி செய்ததாகவும் ஊடகத்தினரிடம் கௌதம் மோரே தெரிவித்தார்.