20,000+ ச.மீ பரப்பளவிற்கு மேல் வீடு கட்டுபவர்களா? தமிழக அரசு அதிரடி உத்தரவு
20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணியை தொடங்கும் முன்பு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும். இந்த பரப்பளவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து உரிமையாளர்களும் அனுமதியை பெற வேண்டும்.
கட்டுமான பணிகளை தொடங்கும் முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும். கட்டிடம் பயனாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் விண்ணப்பித்து இசைவாணை பெற வேண்டும். வாரியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கட்டிடங்களை இயங்குவதற்கான இசைவாணை வழங்கும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரித்து திறம்பட இயக்க வேண்டும்; சுத்திகரிக்கப்பட்ட நீரை மரங்களை வளர்க்க பயன்படுத்த வேண்டும்; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கண்காணிக்க, கண்காணிப்பு கருவியை பொருத்தி வாரியத்தின் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைக்க வேண்டும். திடக்கழிவுகளை முறையாக சேகரித்து கையாள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும். டீசல் ஜெனரேட்டர்களுக்கு தகுந்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. இதுபோன்ற கட்டிடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம். விதிகளை மீறியது தெரியவந்தால், அவற்றை மூடலாம் , மின் இணைப்பை துண்டித்து சீல் வைக்கலாம்.
உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சாலையோரங்களில் கொட்டினால், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்...