ATM அறையில் கேட்ட பலத்த சத்தம்.. பட்டப்பகலில் சிங்கிளாக ஆடிய வேட்டை - ஓடி வந்து பார்த்து அதிர்ந்த மக்கள்

x

வேலூரில் ஏடிஎம் இயந்திரத்தை மரம் வெட்டும் கோடாரியால் உடைத்து ஒருவர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊசூர் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம்மினுள் இருந்து திடீரென பலத்த சத்தம் கேட்டு, அந்த வளாகத்தில் உள்ளே கடைகள் அனைத்தும் அதிர்ந்து போயிருக்கிறது....

இதனால் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரம் வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

பட்டப்பகலில், திறந்த வெளியில், அதுவும் மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் அரங்கேறிய இந்த செயல் பொதுமக்களை பரபரப்படைய செய்த நிலையில், அதை வீடியோ எடுத்த பொதுமக்கள் போலீசாருக்கு அதை அனுப்பி தகவல் தெரிவித்தனர்...

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஏடிஎம்மின் பாதுகாப்பு கட்டமைப்பை தகர்க்க முடியாமல் அந்த நபர் நொந்து போனதும், இதனால் ஏடிஎம்மியில் இருந்த பணம் கொள்ளை போகாமல் தப்பியதும் தெரியவந்துள்ளது...

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர்தான் இந்த சம்பவத்துக்கு சொந்தக்காரர் என்பது தெரியவர, அவரை தட்டிதூக்கிய போலீசார், கந்தசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்....

அப்போது, மது அருந்த பணமில்லாமல் கந்தசாமி தத்தளித்து வந்ததும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியில் உடைத்து பணம் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவர் சென்றதும் தெரியவந்தது...

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி மன நலம் பாதிக்கப்பட்டவரென்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு மனநல பரிசோதனை செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...

சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம், சென்னை, பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு என தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய விவகாரங்களுக்கு மத்தியில், இந்த சம்பவம் போலீசாரை கொஞ்சம் பரபரப்படைய செய்தது...


Next Story

மேலும் செய்திகள்