திருமணத்துக்காக நீண்ட நாள் ஏக்கம்- மேட்ரிமோனியில் வந்த அழகான போட்டோ.
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசையை தூண்டி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா பெண்ணை சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அசோக் சைதன்யா என்பவர், சென்னை, ஆவடியில் தங்கி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். 33 வயதாகும் இவர், திருமணம் செய்து கொள்வதற்காக தனது சுயவிவரத்தை மேட்ரிமோனியில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் ஆந்திராவை சேர்ந்த சந்தியா என்பவருடன் அசோக் சைதான்யாவுக்கு பழக்கம் ஏற்பட, சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி அசோக்குடன் சந்தியா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதில், மயங்கி போன அசோக், சந்தியா கேட்கும் போதெல்லாம் பணத்தையும், பொருள்களையும் வாரி வழங்கி வந்ததாக தெரிகிறது. 9 லட்சம் ரூபாய் வரையிலான பணம், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் போன்றவைகளை அசோக்கிடம் இருந்து பெற்ற சந்தியா, அவர் திருமணம் தொடர்பான பேச்சை எடுத்த போது நம்பரை பிளாக் செய்திருக்கிறார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக், இணையவழி குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சந்தியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்யூட்டர், 3 செல்போன், 6 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரின் 8 மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் பக்கத்தை முடக்கி சந்தியாவை சிறையில் அடைத்தனர்.