வாக்காளர் பட்டியலில் ஓரே முகவரியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - கோவையில் குழப்பம் | Kovai
கோவையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரே முகவரியில் வசிப்பது போன்று வாக்காளர் பட்டியலில் விவரங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், கோவையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வசிக்கும் முகவரியிலேயே, ஏற்கெனவே இருந்த ஆட்சியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக புரிந்த அர்ச்சனா பட்நாயக் முதல், அவரைத் தொடர்ந்து ஆட்சியராக இருந்த ஹரிஹரன், ராசாமணி ஆகியோரின் பெயர்களும் அதே முகவரியில் இடம்பெற்றுள்ளன. 4 மாவட்ட ஆட்சியரின் பெயர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும், ஒரே முகவரியில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்தவர்களின் பெயர்களை நீக்காமலேயே, புதிய ஆட்சியர்களின் பெயர்கள் அந்த முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்த குளறுபடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.