16 நிமிடத்தில் 36 செய்திகள் | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்
நீலகிரி, கோவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்பொபுள்ளதாகவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிவாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நீலகிரி விரைந்துள்ளது. அங்கு 465 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் 42 கண்காணிப்புக் குழு தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், நிலுவையில் உள்ள சாலை, பாலம் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், திட்டங்கள் தாமதமாவதற்கு நிதி காரணமில்லை எனவும், நிலம் கையெடுப்பு, துறைகள் ஒருங்கிணைப்பு பிரச்சினை தான் எனவும் தெரிவித்தார். இதில் உடனடி தீர்வு காண தலைமைச்செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.