தி.மலை ATM கொள்ளையர்களை தேடி சென்ற தமிழக போலீஸ்.. வேறு 2 கொள்ளையர்களை எரித்து கொன்ற ராஜஸ்தான் மக்கள் - திகீர் சம்பவம்

x
  • திருவண்ணாமலையில், 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த சம்பவத்தில், வடமாநில கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • கொள்ளையடித்த விதத்தை அடிப்படையாக வைத்து, இந்த சம்பவத்தை அரங்கேற்றியது ஹரியானா மாநில கொள்ளையர்கள் என போலீசாருக்கு தெரியவந்தது.
  • அதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், சென்னை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், ஹரியானா மாநில கொள்ளையர்கள் இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.
  • கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் அவனது கூட்டாளி ஆசாத் ஆகிய 2 பேரிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய் பணம், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவர்களிடம் கொள்ளை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அந்த விசாரணையில், மற்ற கொள்ளையர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • அதுமட்டுமல்லாமல், 3 கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க, தனிப்படை போலீசார் ஹரியானா விரைந்துள்ளனர்.
  • ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொள்ளையர்களை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • அதாவது, ஏடிஎம் கொள்ளையர்களை தேடிச்சென்ற இடத்தில், ராஜஸ்தானை சேர்ந்த 2 கொள்ளையர்களை, ஹரியானா மாநில மக்கள், நான்கு சக்கர வாகனத்தில் எரித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இதன் காரணமாக Firozpur பகுதியில் கலவரம் உண்டானதால், அங்கு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக, அடையாளம் காணப்பட்ட 3 கொள்ளையர்களை பிடிக்கும் பணியில், தமிழக போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படா வண்ணம், தற்போது தற்காலிகமாக கொள்ளையர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கவனத்தில் கொண்டு, கொள்ளையர்களை கைது செய்வதற்கான வியூகத்தை, ஹரியானா மாநில போலீசாருடன் தமிழக போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • தனிப்படை போலீசாரின் தீவிர முயற்சியில், விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்