வயிற்றில் 9 மாத பிஞ்சு குழந்தை.. தரதரவென இழுத்து சென்ற கார்..2 உசுரும் போச்சு..பாரீனில் கதறும் கணவன்
புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டி கிராமத்தில் இருந்து மண்டையூர் காவல்நிலையத்திற்கு இவர் கிளம்பி சென்றபோது, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது...
பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.
இந்த சூழலில் தான், 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியான விமலா... தினமும் மண்டையூர் காவல்நிலையத்துக்கு பைக்கில் போய் வந்திருக்கிறார். வழக்கம்போல, இன்றும் அவர் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த படி, காவல்நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, பள்ளத்துப்பட்டி கிராமத்தின் சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின்ரோட்டிற்கு வர முயற்சித்தபோது... அசுரவேகத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று.. பெண் காவலர் விமலாவின் மீது பயங்கரமாக மோதியுள்ளது..
பிறகு, மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தோடு காவலர் விமலாவும் சில தூரங்களுக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே விமலா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்..
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மண்டையூர் போலீசார் விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 மாதம் நிறைமாத கர்ப்பிணி பெண் காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
உயிரிழந்த பெண் காவலர் விமலாவின் குடும்பத்துக்கும், காவல்துறைக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த பெண் காவலர் விமலாவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் குழந்தையை பெற்றெடுக்க போகிறார், தாயாக போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த இவரின் குடும்பம் இப்போது கண்ணீர் கடலில் ஆழ்ந்திருக்கிறது..