நாமக்கல்லில், தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல், தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த காவிய தர்ஷினி என்பவர், திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியின் அருகே காவிய தர்ஷினி சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையில், கல்லூரி கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்தாக தெரிய வந்துள்ளது. மேலும், இவரது சகோதரர் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், காவிய தர்ஷினி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரியின் மாடியில் இருந்து முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.