பாக்மதி எக்ஸ்பிரஸ்க்கு எமகண்டமான `51B’ கோர விபத்தின் உண்மை காரணம் இதுதானா? -அவிழ்ந்தது மர்ம முடிச்சு

Update: 2024-10-13 06:22 GMT

#bagmatiexpress | #trainaccidentnews | #chennaitrain

பாக்மதி எக்ஸ்பிரஸ்க்கு எமகண்டமான `51B’

கோர விபத்தின் உண்மை காரணம் இதுதானா?

`இண்டிகேஷன்’..அவிழ்ந்தது மர்ம முடிச்சு

சென்னை கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், விபத்தில் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை இரவு, கவரப்பேட்டையில் சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில் மெயின் லைனில் சிக்னல் கொடுக்கப்பட்டும், லூப் லைனுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது அது எப்படி நடந்தது என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதில் லூப் லைனில் சென்றதால் சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது. அதேபாணியில் இங்கும் விபத்து ஏற்பட்டுள்ளது.

கவரப்பேட்டையில் விபத்து நேரிட்ட இடத்தில் இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌதிரி மற்றும் ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக இன்டர்லாக் பகுதியில் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வை மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரயிலை கவிழ்க ஏதேனும் சதி நடந்ததா? என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செளதிரியிடம், விபத்துக்கு மனித கோளாறா? அல்லது சிக்னல் கோளாறா என கேட்ட போது, விசாரணை முடிவில் தெரியவரும் என்றார்

விசாரணையில் என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரம் காட்டி வருகிறது.

பாக்மதி எக்ஸ்பிரஸ் 51B என்ற தண்டவாள குறியீட்டு பகுதிக்கு வந்தபோது மெயின் லைனுக்கு மாற்றாக லூப் லைனுக்குள் நுழைந்து சரக்கு ரயிலில் மோதியுள்ளது.

அப்போது ரயிலின் வேகம் 100 கிலோ மீட்டரிலிருந்து 70 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்த விசாரணை தீவிரமாக்கப்பட்டிருக்கும் வேளையில், 51B தண்டவாள குறியீட்டு பகுதியில் பாயிண்ட் இண்டிகேஷன் மெஷின் உடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் இருந்து மாறி லூப் லைனில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிக்னல் தரவுகள் அடிப்படையில் மெயின் லைனில் ரயில் தொடர்ச்சியாக சீரான வேகத்தில் செல்ல சிக்னல் வழக்கம் போல் வழங்கப்பட்டதாகவும் ஆனால் ரயில் மெயின் லைனுக்கு மாறாக லூப் லைனில் நுழைந்து இருக்க கூடும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சதிதிட்டமா? என்ற கேள்விக்கு ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறையை பட்டியலிட்ட திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில், 10 மாதங்களாக சரங்கு ரயில் அங்கேதான் நிற்கிறது என்றதோடு, இது மத்திய அரசு செய்த சதிதான் என விமர்சித்தார்.

இதற்கிடையே கவரப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் கவரப்பேட்டையில் சிக்னல் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்