இந்தியாவின் ஏவுகணை மனிதர்... 11ஆம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதித்தவை...

Update: 2023-07-27 04:59 GMT

இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஏவுகணை மனிதருமான அப்துல் கலாம் மறைந்த தினம் இன்று.

1931ல் ராமேஸ்வரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம், சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில், விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார். 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

1980ல் ரோகிணி என்ற செயற்கைகோளை அவர் தலைமையிலான குழு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் தலைவராக இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டார்.

அக்னி, பிரித்வி உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று புகழப்பட்டார். பிரதமரின் தலைமை விஞ்ஞான ஆலோகராக 1999 வரை பணியாற்றினார்.

1998ல் பொக்ரான் அணுகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி, பெரும் புகழையும், பாராட்டுதல்களையும் பெற்றார்.

செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படும் உலோகங்களைக் கொண்டு மாற்று திறனாளிகளுக்கு, குறைந்த எடை கொண்ட செயற்கை கால்களை வடிவமைக்க வகை செய்தார்.

2002 குடியரசுத் தலைவர் தேர்தலில், வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2007ல் பதவி காலம் முடிந்த பின், ஷிலாங், இந்தோர், அகமதாபாத் இந்திய மேலாண்மை கழகங்களில் கெளரவ பேராசியராக பணியாற்றினார்.

அவரின் கல்லூரி தோழரான எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ந்த கதையை எழுத திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைக் கூடவில்லை.

இளம் வயதில் சைவ உணவுற்கு மாறிய அப்துல் கலாம், வீணை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கர்நாடக இசைக்கு ரசிகராக இருந்தவர்.

ஏராளமான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அப்துல் கலாமிற்கு, 1997ல் மத்திய அரசு பாரத ரத்னா விருது அளித்து கெளரவித்தது.

2015ல் ஷிலாங் இந்தியா மேலாண்மை கழகத்தில் உரை நிகழ்த்திய போது, மாரடைப்பு ஏற்பட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார்.

இந்தியாவின் ஏவுகணை மனிதர் அப்துல் கலாம் காலமான தினம் 2015 ஜூலை 27.

Tags:    

மேலும் செய்திகள்