மனித இனத்துக்கே விடிவு காலம் ..வாழ்நாள் முழுவதும் சரிசெய்ய முடியாத உடல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
உலக வரலாற்றில் முதல்முறையாக கருவில் உள்ள குழந்தைகளின் மூளையை ஆய்வு செய்து சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
உலகம் முழுவதும், மூளை வளர்ச்சி குறைபாடுகள் காரணமாக, நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள், பல்வேறு உடல் குறைபாடுகளுடன் அதிகமான குழந்தைகள் பிறக்கக்கூடிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தி சென்னை ஐஐடி சாதனை படைத்திருக்கிறது..
ஐஐடி வளாகத்தில் இயங்கக்கூடிய சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தையின் மூளை வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ளது.
தாயின் கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அதன் தன்மையில் மாறுபாடுகள் இருக்கின்றனவா ? என்பது குறித்த ஆராய்ச்சியை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் அடங்கிய வல்லுனர் குழு மேற்கொண்டுள்ளது.
கரு சிதைவினால் உயிரிழந்த சிசுவின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மூளை, இறந்து பிறந்த குழந்தையின் மூளை என ஐந்து வகையான மூளைகளை ஆராய்ச்சி செய்து இருக்கின்றனர்.
இதன் மூலம் வயிற்றிலேயே குழந்தையின் பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்கின்றனர்..
மேலும் கற்றல் குறைபாடுகள், மன இறுக்கம், வளர்ச்சி குறைபாடுகள் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் இந்த ஆய்வு முக்கியமானதாக திகழ்கிறது.
இந்த தொழில்நுட்பத்திற்கு தரணி என பெயர் சூட்டியிருப்பதாக சொன்ன ஐஐடி இயக்குனர் காமகோடி, இதன் மூலம் பல பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சிக்கு பெரும்பாலான உபகரணங்கள் இந்திய தயாரிப்பு என்றும், 115 கோடி ரூபாய் செலவில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில்,
அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மூளையை, 5132 பகுதிகளாக்கி, டிஜிட்டல் முறையில் படமாக்கி உள்ளனர்.
14 முதல் 24 வாரம் வரையான கருவின் மூளையை ஆராய்ச்சி செய்தது, உலகளவில் முதல்முறை என கூறப்படும் சூழலில், இப்படிப்பட்ட கண்டுபிடிப்பு முடிவுகளை, உலக அளவில் பொதுத்தளத்தில் வெளியிடுவதாகவும், இதற்காக நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும் என்றும் பூரிப்புடன் தெரிவித்துள்ளார் ஐஐடி இயக்குநர் காமகோடி..
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐஐடியின் சாதனைகளில் மற்றொரு முக்கிய மகுடமாக குழந்தையின் மூளை ஆராய்ச்சி அமைந்திருக்கிறது என பாராட்டுகின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்..